பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


சைவ சமயத்திற் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் தமிழில் அறிவுறுத்த எண்ணிய திருமூலர் நாற்சீரடி நான்கினாலாகிய கலிப்பாவின் வகையாகிய யாப்பினுள் இத்திருமந்திர மாலையை அருளிச் செய்துள்ளார். ஒற்று நீக்கி எழுத்தெண்ணுங்கால் அடிதோறும் பன்னிரண்டெழுத்தும் நாலாமடி நேரசையினைக் கொண்டு தொடங்கியதாயின் பதினேரெழுத்தும் பெற்று வெண்டளை பிழையாது வருவது திருமந்திரத்தின் யாப்பமைதியாகும். இந் நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர், திருமந்திரமாலை என்பதாகும். இந் நூல் மூவாயிரம் திருப்பாடல்களை யுடைமைபற்றி இதனைத் ‘தமிழ் மூவாயிரம்’ என வழங்குதலும் உண்டு. இந்நூல் தொல்காப்பியனார் வகுத்துரைத்த எழுநிலத் தெழுந்த செய்யுட்களுள் ‘மறைமொழி கிளந்த மந்திரத்தான' என்ற செய்யுளமைப்பின்பாற் படுதலின் திருமந்திரம் என வழங்கப் பெறுவதாயிற்று. தாம் கூறும் சொல்லின் பொருண்மை எவ்விடத்தும் எக்காலத்தும் குறைவின்றிப் பயன் தரும்படி சொல்லும் ஆற்றல் வாய்ந்த நிறைமொழி மாந்தராகிய பெரியோர்களால் ‘இஃது இவ்வாறாகுக’ எனத் தமது ஆணை தோன்றச் சொல்லப்பட்டு அவ்வாற்றலனைத்தையும் தன்னிடத்துப் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன் மொழியே மந்திரம் எனப்படும். பிறரைச் சபிக்கும் நிலையில் அமைந்த மந்திரச் செய்யுளை அங்கதப்பாட்டு எனவும், உலக நலங்குறித்து வரும் மறைமொழியினேயே மந்திரம் எனவும் வழங்குவர் தொல்காப்பியர். சிவபெருமான் சிவயோகியாரது பழையவுடம்பை மறைப்பித்துச் சாத்தனுார் ஆயணுகிய மூலனுடம்பில் இருந்தபடியே திருவாவடுதுறையிற் சிவயோகத்தில் அமரச் செய்தருளியது, திருமூலர் சிவாகமங்களைச் செந்தமிழால் வகுத்தருளிச் செய்யவேண்டும் என்ற திருக்குறிப்பே என்பதும், இறைவரது இத்திருவருட் குறிப்பினையுணர்ந்த திருமூலர் திருவாவடுதுறையில்