பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

 மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய இத்திருமுறையினைனே அருளிச் செய்தாரென்பதும் திருமூலர் வரலாறு கூறும் சேக்கிழாரடிகள் வாய்மொழியாலும்,

‘சிந்தைசெய் தாகமஞ் செப்ப லுற்றேனே.’

(திருமந்-72) எனவும்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’

(௸. 81)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளாலும் அறியப்படும்.

திருமந்திாமாலையாகிய இந்நூலைத் திருமூலநாயனார் ‘ஒன்றவன்றானே’ என்ற திருப்பாடலை முதலாகக்கொண்டு தொடங்கி மூவாயிரந் திருப்பாடல்களால் நிறைவுசெய்தருளினார் என்பர் சேக்கிழார். இப்பொழுது ‘ஒன்றவன் றான்’ என்ற திருப்பாடலுக்கு முன்னே ‘ஐந்துகரத்தனை’ எனவரும் விநாயகர் வணக்கத் திருப்பாடல் திருமந்திரத்திற் காப்புச் செய்யுளாக முதற்கண் இடம் பெற்றுளது. தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திரத்தின் பாடற்றொகை இப்பொழுது 3109 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு மிகுந்து காணப்படுதற்கு இவற்றுட் சில பாடல்கள் பொருளியைபுபற்றி இருமுறையும் மும்முறையுமாக இந் நூலில் இடம்பெற்றிருத்தலும், சில பாடல்கள் பாடபேதங் களால் உருவந்திரிந்து வெவ்வேறு பாடல்களாக எழுதப் பெற்றிருத்தலும், இந்நூலைப் பயின்ற பிற்காலச் சான்றோர் சிலர் இதன் சொற்பொருள் யாப்பமைதியினை அடியொற்றிப் பாடிய பாடல்கள் சில ஒப்புமைபற்றித் திருமந்திரம் என்ற பெயராற் குறிக்கப்பட்டு இடைச்செருகலாக இதன்கண் இடம்பெற்றிருத்தலும் காரணங்களாகும்.