பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



திருமந்திர நூலின் தொடக்கத்தில் அமைந்தது பாயிரம் என்ற பகுதியாகும். பாயிரம் என்பது நூலின் வரலாறாகும். இதன்கண் கடவுள் வாழ்த்தும் திருமூலர் தமது குருமரபின் வழிமுறை கூறும் குருபாரம்பரியமும், இந்நூலினத் தாம் இயற்றுதற்குரிய தொடர்பினைப் புலப்படுத்தும் முறையில் திருமூலர் தமது வரலாற்றினைத் தாமே கூறும் நிலையில் அமைந்த ஆசிரியர் வரலாறும் அவையடக்கமும் கூறும் திருப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்பின்னே திருமந்திரப் பாடற்றொகையினையும் பொருட்சிறப்பினையும் கூறும் 99, 100-ஆம் பாடல்களும் குருமட வரலாறு கூறும் 101, 102-ஆம் பாடல்களும் ஆகிய நான்கும் திருமூலர் கூறும் பாயிரத்தின் புறத்தேயமைந்த மற்ருெரு பாயிரமாய்ப் பிற்காலச் சான்றோராற் பாடப்பெற்று இப்பாயிரத்தின் இறுதியிற் சேர்க்கப்பட்டன எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இறைவன் நூலாகிய சிவாகமப் பொருளை அறிவுறுத்தத் திருவுளங் கொண்ட திருமூல நாயனர், அப்பொருளைக் கேட்பார்க்கு ஊக்கம் உண்டாக்கும் பொருட்டு வேத சிவாகமப் பொருள்களின் சிறப்பும் அப்பொருளுணர்வு தமக்குக் கிடைத்த வழிமுறையும் தாம் இந்நூலைச் செய்தற் குரிய காரணமும் என இந்நூலைப் பயில்வோர் இன்றி யமையாது முதற்கண் அறிந்து கொள்ளுதற்குரிய செய்திகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் தொடக்கத்திலுள்ள பாயிரப் பகுதியாகும். அதனையடுத்து இந்நூலிலுள்ள ஒன்பது தந்திரங்களுள் முதல் நான்கு தந்திரங்களும் சிவஞானத்தைப் பெறுதற்கு விரும்பியவர்கள் தம்மை அகமும் புறமும் தகுதியுடையவராக்கிக் கொள்ளுதற்குரிய சாதனங்களையும், நடுவிலுள்ள ஐந்தாந் தந்திரம் சைவ சித்தாந்த சமய தத்துவங்களையும், பின்னுள்ள நான்கு தந்திரங்களும் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறுதற்குரிய நற்பயன்களையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தனவாகும்.