பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிவமயம்

திருமூலநாயனார் அருளிய

திருமந்திரமாலை

என்னும்

பத்தாந்திருமுறையிலிருந்து தொகுக்கப்பெற்ற

திருமந்திர அருள்முறைத் திரட்டு

விநாயகர் காப்பு


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரமாலை என்னும் மறைநூற் பொருளை விரித்துரைக்கத் திருவுளங் கொண்ட ஆசிரியர், இடையூறு நீக்கி இன்னருள்புரியும் விநாயகக் கடவுளை முதற்கண் போற்றுகின்ர் .

(இதன் பொருள்) ஐந்து திருக்கைகளையுடையவனும் யானை முகத்தினை யுடையவனும் சந்திரனது இளைய பிறை வடிவினையொத்த தந்தத்தினையுடையவனும் நந்தியென்னும் திருப்பெயருடைய சிவபெருமானுக்கு மைந்தனும் சிவஞானச் சுடர்க்கொழுந்தாகத் திகழ்பவனும் ஆகிய விநாயகப் பெருமானை அறிவினுள் (அறிவாக) வைத்து (அம் முதல்வனுடைய ஞானசத்தி கிரியாசத்தி யென்னும்) திருவடிகளைப் போற்றித் துதிக்கின்றேன் என்றவாறு,