பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள் முறைத் திரட்டு

17


(இ-ள்) வேதத்துள் ஏகம் எனப்படும் பரம்பொருள் சிவபெருமானாகிய அவனே. அவனுடன் வைத்து இரண்டாவதாக எண்ணப்படுவது அவனின் வேறல்லாத இனிய திருவருளாகிய சத்தியே. அம்முதல்வன் குரு லிங்க சங்கமம் என்னும் மூன்றினுள்ளே நிலைபெற்றுள்ளான். நான்கு மறைகளையும் (உயிர்கள் உய்யுமாறு) உணர்ந்து அருளிச் செய்தனன். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளையும் வென்று அடக்கியருளினான். ஆறிடங்களிலும் விரிந்து பரவியுள்ளான். ஏழண்டங்களுக்கும் அப்பாலாய்க் கடந்து சென்றுள்ளான். மன்னுயிர்கள் தன்னை எளிதின் உணர்தற்பொருட்டு நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் எட்டினும் பிரிவின்றி எழுந்தருளியுள்ளான், எ-று.

ஒன்று - வேதத்துள் ஏகம் என்ற சொல்லாற் போற்றப்படும் பரம்பொருள். “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்பது திருவாசகம். “ஒன்றென்ற தொன்றே காண் ஒன்றே பதி” என்பது சிவஞானபோதம். ஞாயிறாகிய ஒருபொருளே தன்னை விளக்கும் நிலையிற் கதிரோன் எனவும் உலகப் பொருள்களை விளக்கும் நிலையிற் கதிர் எனவும் இருதிறப்பட்டு ஒருபொருளாந் தன்மையிற் பிரிவின்றி இயைந்து நிற்குமாறு போன்று, பரம்பொருள் ஒன்றே புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையிற் சிவம் எனவும், உலகவுயிர்களை நோக்கி அருளுருவாய் நின்று உணர்த்தும் நிலையிற் சத்தி எனவும் இவ்வாறு குணியும் (பண்புடைப் பொருளும்) குணமும் (பண்பும்) ஆக இருதிறப்பட்டு இயைந்து நிற்றலின், ‘இரண்டு அவன் இன்னருள்’ என்றார். இரண்டு - இரண்டாவதாகச் சொல்லத்தக்கது; அருள் என்றது சத்தியினை. சத்தியும் சிவமும் தம்மிற் பிரிவின்றியுள்ள ஒரு பொருளே என்பதனை “நந்தம்மை