பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள் முறைத் திரட்டு

19


என நம்பியாரூரரும் அருளிய பொருளுரைகள் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும். ஆறு-மக்களது உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்கள்; மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு அத்துவாக்கள் (வழிகள்) எனக் கொள்ளுதலும் பொருந்தும். விரிதல்-பரவி வியாபித்தல். ஏழ் உம்பர்-ஏழு அண்டங்களுக்கும் அப்பால்; இனி ஆறு ஆதாரங்களையுங் கடந்து ஏழாவது ஆதாரமாயுள்ள ஆயிரவிதழ்த் தாமரையாகிய மேலிடம் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். உம்பர்-மேல். உணர்ந்து எட்டு இருந்தான் என இயைத்துப் பொருள் கொள்க. உணர்ந்து-உணர; மாற்ற மனங்கழிய அப்பாற்பட்டு நின்ற தன்னை உலகவுயிர்கள் எளிதின் உணரும்பொருட்டு எட்டில் (அட்ட மூர்த்தமாக) இருந்தான் என்பதாம்.

‘ஒன்றவன் தானே’ என்னும் இத்திருமந்திரத்தை அடியொற்றி,

“ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையோ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே” (1-11-2)

எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடல் ஒன்று முதல் எட்டளவும் குறித்த எண்ணலங்கார முடையதாய் அமைந்திருத்தல் காணலாம்.


2. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.