பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

திருமந்திரம்


திருமூலர் திருமந்திரமாலையில் தாம் கூற எடுத்துக் கொண்ட பொருள் இதுவென அருளிச் செய்கின்றார்.

(இ-ள்) எனது இனிய உயிரின்கண் உயிராய் நிலை பெற்றுள்ள தூயவனும், நான்கு திசைகளிலும் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் நலம்புரியும் இயல்புடைய அருளாகிய அம்மைக்கு நாயகனும், பெருந்திசைகளுள் ஒன்றாகிய தென்திசைக்கு ஒப்பற்ற காவலனுகிய இயமனை (த்தன்னை அடைக்கலமாக அடைந்த அந்தணாளனாகிய மார்க்கண்டேயர் பொருட்டு) உதைத்து அடக்கியருளியவனும் ஆகிய சிவபெருமானை (அவனுக்கு அடியவனாகிய) யான் போற்றுதல்கூறிப் பரவி அவனது பொருள் சேர் புகழ்த்திறங்களைக் கூறத் தொடங்குகின்றேன். எ-று.

இன்னுயிர் மன்னும் புனிதனை, நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை, மேற்றிசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனும் கூற்று உதைத்தானை யான் போற்று இசைத்துக் கூறுகின்றேன் என இயைத்துப் பொருள் கொள் ளுதல் வேண்டும். போற்று-போற்றுதல்; தோத்திரம். போற்று இசைத்தல்-தோத்திரம் சொல்லி வழிபடுதல். என்னுயிரைக் காட்டிலும் எனக்கு இனிமையானது பிறிதொன்று இல்லை என்பார், ‘இன்னுயிர்’ என்றார். என்னுயிரிலும் சிறந்து உயிர்க்குயிராய் என்னுயிரில் நிலைபெற்றுள்ளவன் தூயோனாகிய இறைவன் என்பார், ‘இன்னுயிர் மன்னும் புனிதன்’ என்றார் நாற்றிசை என்பது அத்திசைகளில் வாழும் உயிர்களை யுணர்த்தியது; இடவாகு பெயர். நல்ல மாது-நலம்புரியும் இயல்புடைய திருவருளாகிய சத்தி. நாதன்-நாயகன். மேற்றிசை-கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் பெருந்திசைகள். அவற்றுள் ஒன்று தென் திசை என்பார், மேற்றிசைக்குள் தென் திசை என்றார். மேற்றிசை யெனப்படும் பெருந் திசை நான்கினுள் ஒன்றாகவுள்ளது தென் திசை என்பதாம். தென் திசைக்கு வேந்தனாம் கூற்று என இயையும் .