பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள் முறைத் திரட்டு

21


தென் திசைக்கு வேந்தன் - தென் திசைக்குக் காவலன். கூற்று-இயமன். உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துப் பிரித்தற்றொழிலுடையனாதல் பற்றிக் கூற்று என்பது காரணப் பெயராயிற்று. உணர்த்தவுணருஞ் சிற்றறிவினனாகிய யான் வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட இறைவனது இயல்பினை உணர்ந்து கூறும் உணர்விலேனாயினும் இன்னுயிர் மன்னும் புனிதனாகிய அவனைப் போற்றிசைத்து அவனது அருளின் துணைகொண்டு ஒன்றி உணர்ந்து ஒருவாறு உரைத்தற்கு முற்பட்டேன் என்பார், ‘இன்னுயிர் மன்னும் புனிதனைப் போற்றிசைத்து யான் கூறுகின்றேன்’ என்றருளிச் செய்தார். இவ்வாறே,

“அவனரு ளாலே யவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓயவுரைப்பனியான்”

எனத் திருவாதவூரடிகளும் மாசில்மணியின் மணிவார்த்தையாகிய திருவாசகத்தைத் தொடங்கியருளினமை இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும்.


3 சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

தனக்கு உவமையில்லாதான் இறைவன் என்பது உணர்த்துவது இத்திருப்பாடல்.

(இ-ள்) சிவனாகிய அவனை ஒப்பாவார் இவ்வுலகில் யாவரும் இல்லை. சிவபெருமானுக்கு ஒப்பான தெய்வம் (எங்கேனுமுளதோ என்று அறிவு நூல்களின் துணை கொண்டு ஆராய்ந்து) தேடினாலும் அத்தகையதொரு தெய்வம் எங்கும் இல்லை. (படைத்தற் கடவுளும் காத்தற்