பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

திருமந்திரம்


துணைபெற்றன்றிப் பேராவுலகமாகிய வீட்டுலகத்தினை யடையும் நெறியிருப்பதாக யான் அறிந்திலேன். எ-று.

இறைவன் மக்களது சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் அப்பாற்பட்டு விளங்குதல் பற்றி அவன் எனச் சேய்மைச் சுட்டாற் கூறினார். அமுதமுண்டு சாவா நிலை யினராகிய தேவரும் இறைவனருளைப் பெறாராயின் தாம் நுகர்தற்குரிய இன்பங்களையிழந்து துன்புறுவரென்பார், ‘அவனையொழிய அமரரும் இல்லை’ என்றார் . அமரர்-தேவர். அமரரும் என்றவிடத்து உம்மை உயர்வுசிறப்பு. ஐம்பொறிகளைச் சென்றவிடத்திற் செல்லவிடாது அடக்கிய நிலையிற் செய்யத்தகும் தவம், பொறிவாயில் ஐந்தினையும் அடக்குதற்கு வேண்டிய ஆற்றலை வழங்கும் இறைவனது திருவருளின் துணைகொண்டே செய்து நிறைவேற்றுதற்குரியதாகும். அவனது அருளின் துணையில்லையேல் எத்தகைய தவமும் நிறைவேறாது என்பார், ‘அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை’ என்றார். ‘திருத்துறையூர்த் தலைவாவுனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே’ என நம்பியாரூரர், தமக்குத் தவநெறி தந்தருளும்படி திருத்துறையூர்ப் பெருமானை வேண்டிக்கொண்டதும் இதுபற்றியேயாகும்.

அயன், அரி, அரன் என்னும் மும்மூர்த்திகளையும் உள்நின்று இயக்கி உலகத்தைப் படைத்துக் காத்தளிக்கும் முத்தொழில்களையும் செய்தருள்பவன் சிவபெருமான் ஒருவனே என்பதுணர்த்துவார் ‘அவனன்றி மூவரால் ஆவது ஒன்றில்லை’ என்றார். ஆவது-இயல்வது.

“தேவர்கோ வறியாத தேவதேவன்
          செழும்பொழில்கள் பயந்துகாத்தழிக்கும் மற்றை
மூவர்கோனாய் நின்ற முதல்வன்”

எனவரும் திருவாசகம் இங்கு எண்ணத்தகுவதாகும். சிற்றறிவும் சிறுதொழிலும் உடையனவாய்ப் பாசத்தாற்