பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள் முறைத் திரட்டு

25


பிணிக்கப்பட்டுள்ள உயிர்த் தொகுதிகள் முற்றுணர்வும் வரம்பிலாற்றலுமுடைய முதல்வனது திருவருளின் துணை கொண்டே தம்மைப் பிணித்துள்ள பாசங்களையறுத்துப் பேராவியற்கையாகிய வீட்டுலகினைப் பெறுதற்குரியன என்பதனையும், இறைவனது அருள் வழியொழுகுதலாகிய திருவருள் நெறியினையன்றி உயிர்கள் வீடு பெறுதற்குத் துணைபுரியத்தக்க பிறிதொரு நெறியில்னை என்பதனையும் எனது குருநாதனாகிய நந்தியருளாலே நன்குணர்ந்து கொண்டேன் எனத் தமது அநுபவத்தினை உலகத்தார் உள்ளத்திற் பதியும்படி யுணர்த்த விரும்பிய திருமூலர், ‘அவனன்றி ஊர்புகும் ஆறு அறியேனே’ என்றார். இங்கு ஊர் என்றது, சிவமாநகர் எனப் போற்றப்பெறும் வீட்டுலகினை. ஆறு-வழி.


5. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாவெனில் அப்பனு மாகுவன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. (7)

சிவனது அநாதி முறைமையான தொன்மையினையும் அருளின் நீர்மையினையும் உணர்த்துகின்றது.

(இ~ள்) பொன்னையொத்து விளங்கும் (நெஞ்சத்) தாமரையின் அகத்தே எழுந்தருளிய இறைவன், (உலகம் படைக்கப்பெறும்) தொன்மைக்காலத்தே தம்முள் (தொழில் வகையால்) ஒத்துள்ள (அயன் அரி அரன் என்னும்) மும்மூர்த்திகளுக்கும் முந்திய தொன்மையுடையவன்; தன்னை ஒப்பாவது ஒரு பொருளும் இல்லாத நிலையில் தனி முதல்வனாகத் திகழ்பவன்; தன்னை (அன்பினால்) அப்பா என அகங்குழைந்து அழைத்தால் (அவ்வாறு அழைத்துப் போற்றுவார்க்கு) அப்பனுமாய் எளிவந்து அருள்புரியும் பேரருளாளனாவன். எ-று.