பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள் முறைத் திரட்டு

27


(திருக்குறள் - 7) என்பார் ‘தன்னை ஒப்பாயொன்றும் இல்லாத் தலைமகன் என்றார்’. ‘அப்பனும்’ என்ற எச்ச உம்மை அன்னையாதலேயன்றி அப்பனாகவும் உள்ளான் என்பதனையுணர்த்தியது. ‘அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீயலையோ’ (4-112-8) என நாவுக்கரசரும் ‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே’ எனத் திருவாதவூரடிகளும் அன்பினால் அழைத்துப் போற்றினமையும், அம்மே அப்பா என்று அழுது அழைத்தருளிய காழிப் பிள்ளையாருக்கு இறைவன் அம்மையப்பராய் எழுந்தருளி எளிவந்து அருள் செய்தமையும் இத்திருமந்திரப் பொருளின் மெய்ம்மையினைத் தெளிவித்தல் காணலாம்.

6. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் லன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. (8)

இறைவனுடைய திருவருட் பண்புகளை விரித்துரைக்கின்றது.

(இ - ள்) ஈசனாகிய சிவபெருமான், தீயைக்காட்டிலும் வெம்மையுடையவன்; நீரைக்காட்டிலும் குளிர்ச்சியுடையவன்; ஆனாலும் அவனது அருளின் திறத்தை உள்ளவாறு அறிவார் ஒருவருமே இல்லை. (அவனது அருளின் தன்மையை அறியவல்லார்க்கு) தாழ்சடையினை யுடையானாகிய சிவபெருமான் (சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத) சேய்மை நிலையினன் ஆயினும் (எவ்வுயிர்க்கும்) தன் திருவருளாகிய நலத்தினையுடையான். நன்மையாகிய அறத்தினையுடையராய்த் தன்பால் அன்புடையார்க்கு மிகவும் அணுகியவனாய் எளிவந்து ஈன்றதாயினுஞ் சிறந்த பேரன்பினனாய் நலஞ் செய்பவனாவன் எ - று.