பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

29


சேயாய் நணியானே’ என மாணிக்கவாசகரும் அருளிய வாய்மொழிகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன. இனி, சேயினும் நல்லன் என்பதற்கு, ‘குழந்தையினும் நல்லன்’ எனப் பொருள் கொள்வாருமுளர். சேய்-பிள்ளை. கைம்மாறு கருதாது அன்பினாற் பேணிப் போற்றுந்திறத்தில் பெற்றதாயினும் சிறந்த பேரன்புடையார் பிறர் யாருமில்லை. அங்ஙனம் அன்புடைய பெற்ற தாயைக் காட்டிலும் உயிர்களிடத்தே பேரன்புடையவனாய் இன்னருள் புரிபவன் இறைவன் ஒருவனே என்பார், ‘தாயினும் நல்லன்’ என்றார். ‘தாயினும் நல்ல சங்கரனுக்கு’ (5-100-9) எனவும், ‘பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே’ (6-38-6) எனவும் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ (திருவாசகம்) எனவும் வரும் அருளிச் செயல் இத்திருமந்திரத்தின் விளக்கமாகும்.


7. பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னாற் றொழப்படும் எம்மிறை மற்றவன்
தன்னாற் றொழப்படு வாரில்லை தானே. (8)

முற்குறித்த ‘தாழ்சடையோன்’ என்பதன் கருத்தினை விளக்கிக் கூறுகின்றது.

(இ - ள்) பொன்னினால் செய்தாலொத்த பொலிவுற்று மிளிரும் சடை இதுவாகும் எனக்கண்டோர் மகிழ்ந்து போற்ற (அச்சடை) தன் பின்புறத்தே தாழ்ந்து விளங்குமாறு எழுந்தருளியிருப்பவன் நந்தியென்னும் திருப்பெய ருடைய சிவபெருமான். (அவன்) என்னையொத்த தவமுடையோரால் தொழுது போற்றப்பெறும் எம் இறைவனாவன். அவனால் தொழப்படும் கடவுளர் பிறரெவருமில்லை. (எனவே எல்லாக்கடவுளராலும் தொழப்படுந் தனிமுதல் அவன் ஒருவனே) எ - று.