பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

31


தான் என்றது இறைவனை. தானே என்பதில் ஏகாரம் தேவர் முதலிய பிறரினின்றும் அவனைப் பிரித்து உணர்த்துதலின் பிரிநிலையேகாரமாகும். இறைவன் இவ்வாறு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள் ஆகிய உலகப் பொருள்களோடும் உயிர்களோடும் பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து நிற்கும் நிலையினை,

“இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
        இயமானனாய் எறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
        ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி
பெருநலமுங் குற்றமும் பெண்ணும்ஆணும்
        பிறருருவுந் தம்முருவுந் தானேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி
        நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே”
                                             (6-94–1)

என அப்பரடிகளும்,

“பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையும்
உண்ணின்றதொர் சுவையும் முறுதாளத் தொலிபலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ் சுடர்மூன்றும்
விண்ணும் முழுதானா னிடம்வீழிம் மிழலையே”
                                               (1-11-4)

எனத் திருஞானசம்பந்தரும்,

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத் தானொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

என மணிவாசகப்பெருமானும் விரித்து விளக்கியுள்ளமை நினைக்கத்தகுவதாகும். உலகப் பொதுமறையாகிய திருக்குறளை அருளிச் செய்த தெய்வப்புலவர் திருவள்ளுவர்