பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

திருமந்திரம்


கடவுள் வாழ்த்தினை யடுத்து அம்முதல்வனது அருளின் வண்ணமாக அமைந்த வான்சிறப்பினை அமைத்துள்ளார். எனவே உலகெல்லாம் வாழ்வதற்குக் காரணமாக அமைந்த மழை இறைவனுடன் பிரிவின்றியுள்ள திருவருளாகிய சத்தியின் ஆற்றலைப் புலப்படுத்தும் குறிப்பினதாகும் என்பார், ‘தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்’ என்றார். ‘சொரிவிப்பார் மழை’ (5-16-3) எனவும்,

“பாரவன்காண் பாரதனிற் பயிரானான்காண்
       பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண்” (6-87-6)

எனவும் நாவுக்கரசரும்,

‘குழைக்கும் பயிர்க்கோர் புயலே யொத்தியால்’ (7-4-4) என நம்பியாரூராரும்,

“நந்தம்மையாளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும்
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்”
                                              (திருவெம்-16)

என மணிவாசகரும் அருளிய மெய்ம் மொழிகள் இறைவனோடு பிரிவில்லாத அம்மையின் அருள்வண்ணமாக நிகழ்வது மழை என்பதனை இனிது புலப்படுத்தல் அறியத்தகுவதாகும். தடவரை-பெரியமலை.


9. மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற்றா னுக்கே
கண்ணகத்தே நின்று காதலித் தேனே.

இடவரம்பின்றி எங்கும் கலந்து அருவாய்நிற்கும் இறைவனைக் கண்ணாரக்கண்டு வழிபடுமாறு உணர்த்துகின்றது.