பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

35


(இ-ள்) எவ்வுயிர்க்கும் தந்தையாய் விளங்குபவனும் நந்தி என்னும் திருப்பெயருடையவனும் தெவிட்டாத அமிழ்தம் போன்றவனும் ஒப்பில்லாதவனும் வள்ளலும் ஊழிக்காலத்தும் கேடின்றியுள்ள முதல்வனும் ஆகிய சிவபெருமானை எந்த முறையிலாயினும் போற்றித் துதிப்பீராக. அங்ஙனம் துதித்தால் அம்முறையிலேயே எல்லாமுடையவனாகிய ஈசனது திருவருளைப்பெற்று இன்புறலாம். எ-று.

ஆரா அமுது-தெவிட்டாத அமுதம். ஆர்தல்-நுகர்ந்தது போதும் என மனநிறைவு பெறுதல். ஆராமை-நுகர்ந்தது போதும் என மனநிறைவு பெறாமை; மேன்மேலும் நுகர வேண்டும் என்னும் விருப்பத்தைத் தோற்றுவிக்கும் அமுதம் போல்பவன் என்பார் ஆரா அமுது என்றார். ஒப்புஇலி-ஒப்பார் இல்லாதவன். வள்ளல்-வரையாது வழங்குபவன். ஊழி-உலகம் அழியும் காலம். தாம் தாம் விரும்பிய சமயக் கொள்கையில் நிற்போராய் எந்த உருவிலாயினும் எந்தப் பெயரிலாயினும் எந்த மொழியிலாயினும் எந்த இடத்திலாயினும் எந்த நெறியிலாயினும் எந்தையாகிய இறைவனை மறவாது ஏத்துதல் மக்களது நீங்காக் கடமையென வற்புறுத்துவார், ‘எப்பரிசாயினும் ஏத்துமின்’ என்றார். பரிசு-தன்மை. ‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும், மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள்’ என்றே சாக்கிய நாயனார் இறைவனைப் போற்றிய திறம் இங்கு நினைத்தற்குரியதாம். ‘எப்பரிசாயினும்’ என்பதற்கு ‘எந்த நோக்கத்தினாலேனும்’ எனப்பொருள் கொண்டு அச்சத்தினாலோ அன்றி அன்பினாலோ ஈசனை ஏத்துமின் எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். “அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும், நெஞ்சம்வாழி நினைநின்றி யூரைநீ” (5-23-9) என்பது அப்பர் அருள்மொழி. அப்பரிசு ஈசன் அருள் பெறலாம் - அவ்வச்சமயவழி நின்று செய்யப்படும் அம்முறையிலேயே