பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

திருமந்திரம்


ஈசனாகிய இறைவனுடைய திருவருளை உறுதியாகப் பெறலாம்.

‘நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீலமணி மிடற்றான் நீர்மையே - மேலுவந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்’
                                    (அற்புதத்திருவந்தாதி - 33)

எனக் காரைக்காலம்மையாரும்,

‘எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே’ (2-40-6)

என ஆளுடைய பிள்ளையாரும்,

‘ஆரொருவர் உள்குருவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்’ (6-8-11)

என ஆளுடைய அரசரும்

‘எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்’
                                             (ஆதியுலா)

எனச் சேரமான் பெருமாள் நாயனாரும் அருளிய பொருளுரைகள், எவ்வகைச் சமய நெறிகளில் நின்றும் இறைவனைத் துதிப்போர்க்கு ‘அறுவகைச் சமயத்தோர்க்கும்’ அவ்வவர் பொருளாய் நின்ற அம்மையப்பனாகிய சிவபெருமானே எளிவந்து அருள்புரிவன் என்னும் மெய்ம்மையினை வற்புறுத்தும் முறையில் அமைந்திருத்தல் காணலாம்.