பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

37


வேதச் சிறப்பு

11. வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (51)

இறைவன் அருளிய முதுநூலாகிய வேதத்தின் சிறப்பினை உணர்த்துகின்றது.

(இ - ள்) வேதத்தின் தொடர்பினை விட்டு நீங்கிய அறநூல் எதுவும் இல்லை. (உலகத்தார்) ஓதியுணரத்தகும் எல்லா அறங்களும் வேதத்தின் கண்ணே அடங்கியுள்ளன. நல்லறிஞர் யாவரும் (இது ஏற்றுக்கொள்ளத் தக்கது, அது ஏற்றுக்கொள்ளத் தகாதது என இவ்வாறு முரண்படப் பேசும்) தர்க்கவாதத்தை விட்டொழித்துப் பொருள்வளம் நிறைந்த (மெய்ந்நூலாகிய) வேதத்தை ஓதியே வீட்டிற்கு வாயிலாகிய ஞானத்தினைப் பெற்றார்கள் எ-று.

வேதம் என்பது இறைவனருளிய பழம் பாடலாகும். விடுதல் - பொருளின் தொடர்பினைவிட்டு வேறாதல். எல்லா அறநூல்களும் உலகியல் ஒழுக்க நூலாகிய வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையனவே என வற்புறுத்துவார், ‘வேதத்தை விட்ட அறம் இல்லை’ என்றார். அறம் - அறநூல். ஓதத்தகும் அறம் எல்லாம் வேதத்தின் உள (ஆதலின்) மதிஞர் தர்க்கவாதத்தை விட்டு வளம் உற்ற வேதத்தை ஒதியே வீடுபெற்றார்கள் என்க. மதிஞர் - அறிவிற் சிறந்தோர். தர்க்கவாதம் - ‘இது ஆகும், அது அல்லது’ எனத் தம்முட் பிணங்கிக் கூறும் உரை. வீடு என்றது வீடு பேற்றிற்கு ஏதுவாகிய ஞானத்தினை.