பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

43


மாரி-மழை; இங்கு மழை பொழிதற்குரிய காலத்தைக் குறித்தது. கோடை-கடுவெயிற்காலம். துரங்க-சொரிய; துரங்க என்னும் செய வென் எச்சம் காரணப் பொருளில் வந்தது. பனிப் பருவம் உலகிற்கு வெம்மையை விளைப்பது. ஆதலால் பனி குறைய மழை பொழிதல் வேண்டும் எனப் பாவை நோன்பினை மேற்கொண்ட இளமகளிர் உமையம்மையை வழிபட்டுப் போற்றும் வழக்கமுண்மையும் இங்கு நினைக்கத்தக்கதாகும். ஏரி-பயிர் வளர்தற்குரிய பெரு நீரைத் தன்னிடத்தே கொண்ட நீர்நிலை. நிற்றல்(மழையின்மையால்) நீர் வரத்துத் தடைப்படுதல். இளைத்தல்-பசியால் வாடி வருந்துதல். உயிர்களின் உடற்பசி நீங்க மழை வெள்ளத்தைத் தன்கண் தேக்கிக் கொண்ட ஏரியாகிய நீர் நிலையினைப் போன்று உயிர்ப்பசியினைப் போக்கும் ஞானமாகிய பெரு வெள்ளத்தைத் தங்கண் தேக்கிக்கொண்டு நிற்பன உலக அன்னையின் வாயிலாக உலகம் நலம்பெற ஆரிய மொழியிலும் தமிழ் மொழியிலும் இறைவன் அருளிய சிவாகமங்களாம் என்ற வுண்மையினைத் திருமூலர் இத்திருமந்திரத்தால் தெளிய விளக்கிய திறம் நினைந்து மகிழத்தக்கதாம். திருமூல நாயனார் காலத்தில் ஆரிய மொழியில் மட்டுமன்றிச் செந்தமிழ் மொழியிலும் வழிபாட்டுக்குரிய மந்திரங்கள் ஒப்ப அமைந்திருந்தன என்பது,

“அந்த நடுவிரல் ஆதிசிறு விரல்
வந்த வழிமுறை மாறியுரை செய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி யிதனை நலமுரைத் தானே” (திருமந் - 1089)

என ‘வயிரவி மந்திரம்’ என்ற பகுதியில் வரும் திருப்பாடலால் நன்கு தெளியப்படும்.