பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

45


17. நந்தி யருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி யருளாலே மூலனை நாடினோம்
நந்தி யருளாவ தென்செய்யும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. (69)

சிவயோகியாராகிய சித்தர் இறைவன் அருளால் மூலன் என்னும் பெயருடைய ஆயனுடம்பிற் புகுந்து, தமது பழையவுடம்பு மறைய மூலனுடம்புடனே இருந்த தன்மையினை இத்திருப்பாடலால் குறித்தருள்கின்றார்.

(இ-ள்) நந்தியாகிய இறைவன் திருவருளால் நாதன் என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றோம். நந்தியாகிய சிவனருளாலே (சாத்தனூரில் ஆநிரை மேய்ப்பானாகிய) மூலனது உடம்பினை நாடி அடைந்தோம். நந்தியாகிய முதல்வனால் (மீண்டும்) அருளப்பெறாத (மறைந்த) அப் பழைய உடம்பு நாட்டகத்தே (எனக்கு) என்ன பயனைத் தரவல்லது? (தாராது) எனவே நந்தியாகிய எம்பிரான் நன்னெறியைக்காட்டி அருள்புரிய யான் (மூலன் உடம்பிலேயே) இருந்தேன், எ-று.

நாதன் என்னும் பேர், சிவயோக நிலை கைவரப் பெற்றார்க்கு உரிய சிறப்புப் பெயராகும். மூலன்- சாத்தனூரில் பசுக்களை மேய்க்குந் தொழிலினனாகிய ஆயன். மூலனை நாடுதலாவது அவனது உயிர் உடம்பினை விட்டு நீங்கிய நிலையில் அவனால் மேய்க்கப் பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிக் கதறுகின்ற துயரத்தினைக் கண்டு பொறாது இறைவனது அருட்குறிப்புணர்ந்து தம்முடைய பழையவுடம்பினை வேறோரிடத்திற் பாதுகாவலாக மறைத்து வைத்துவிட்டு மூலனது உடம்பில் தம்முயிரைப் புகுத்தி அவ்வுடம்புடன்கூடி அப்பசுக்களின் துயரத்தைப் போக்குதல். நந்தி அருளா அது என்றது, இறைவனால் மீண்டும் அருளப்பெறாது மறைக்கப்பட்டு