பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

திருமந்திரம்


கொண்டு) முயன்று தவஞ்செய்ய மாட்டாதார், (மெய்யுணர்வு பெறும் திறத்தில் முயற்சியின்றிப்) பிற்பட்டு நிற்றலால் இப்பிறவியிற் பெறுதற்குரிய பயன் யாதுளது? (ஒன்றுமில்லை). இறைவன் (சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத) தன்னை நன்றாகத் தமிழ் மொழியாற் புலப்படுத்தும் மெய்யுணர்வுடையவனாம்படி (முன்னத் தவமுடையனாகிய) எளியேனை (இப்பிறவியில் மனமொழி மெய்களால்) நலமுடையவனாகப் படைத்தருளினன். எ-று

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் பின்னை நின்று (இப்) பிறவி(யில்) பெறுவது என்னே? இறைவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்னை நன்றாகப் படைத்தனன் என இயைத்துப் பொருள் கொள்க. முன்னே - முற்பிறவி. பின்னை நிற்றலாவது முன் முயன்று தவம் செய்யாமையால் பயன் பெறுதற்குரிய வாய்ப்பின்றிப் பின்னிற்றல். ‘பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெருமானே?’ என்றார் திருவாதவூரடிகளும். முன்னைத் தவமுடைய என்னை என்பார், ‘என்னை?’ என்றார். நன்று ஆக-மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்களாலும் நலம் விளைய. வாக்கு மனங்களுக்கு எட்டாத இறைவன் தன்னைத் தமிழ் மொழியால் உலகத்தார்க்குத் தெளியவுணர்த்தும் மெய்யுணர்வுடையவனாம்படி என்னை மூலனுடம்பிற் புகுத்திப் புதியவகைப் படைத்தருளினன் என்பார், ‘இறைவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்னை நன்றாகப் படைத்தனன்?’ என்றார். பரம்பொருளின் இயல்பினை உள்ளவாறுணர்த்தும் மெய்யுணர்வின் உருவாகத் திகழ்வது தமிழ்மொழி என்னும் மெய்ம்மையினைத் திருமூலர் இத் திருமந்திரத்தால் புலப்படுத்தியருளிய திறம் உணரத் தகுவதாகும். ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் நூலறிவாலும் உயிருணர்வாலும் எளிதிற் காணவொண்ணாத கடவுளைப் புனைந்து காட்டும் படிமக்கலம் ஆக விளங்கும் திறத்தை,