பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

திருமந்திரம்


அப்பாற்பட்டு விளங்குவதே பரம்பொருள் என்பார் ‘பசு பாசம் பதியினைச் சென்று அணுகா’ என்றார். இத்தொடரின் பொருளையே ‘ஊனக்கண் பாசம் உணராப்பதி’ என்ற தொடரால் மெய்கண்டார் எடுத்தாண்டுள்ளார். உண்மை விளக்க ஆசிரியராகிய திருவதிகை மனவாசகங் கடந்தார், இத் திருமந்திரப் பொருளைச் சிந்தித்து உணரும் முறையில்,

“வாக்கு மனமிறந்த வான்கருணை யாளனுருத்
தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா - நீக்காப்
பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய்
கதியிடத்து மூன்றினையுங் காட்டு” (உண்மை-49)

எனத் தம் ஆசிரியரை வினவுகின்றார்.

“மன வாக்குகளுக்கு எட்டாத அருளே வடிவாய் உலகத்திலே தோய்வற்று நிற்கும் ஒப்பற்ற தலைவனே! விட்டு நீங்காமல் இருக்கும் பதிப் பொருளைப் போல் பசுவும் பாசமும் நித்தியப் பொருள்களே என்று அருளிச் செய்தாய். முத்தியிலும் அம்மூன்று பொருள்களும் அழியாமல் நிற்கிற முறைமையை அடியேனுக்கு அருளிச் செய்வாயாக” என்பது இதன் பொருளாகும். இதன் கண் ‘வாக்குமனம் இறந்த வான் கருணையாளன், உருத் தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா’ என்பது ‘பசுபாசம் பதியினைச் சென்று அணுகா’ என்ற இத் திருமந்திரத் தொடரையும், ‘பதியினைப்போல் நித்தம் பசுபாசம் என்றாய்’ என்பது ‘பதி பசுபாசம் எனப் பகர் மூன்றிற் பதியினைப்போல் பசுபாசம் அநாதி’ என்ற தொடரையும் அடியொற்றியமைந்த விளக்கமாகும்.

24. சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலச்
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. (1.17)

குருவினாலன்றி ஞானம் பெறுதல் இயலாது என்கின்றார்.