பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

59


வேறு பிரிக்கப்பட்டு உப்பு என உருக்கொண்ட அது, மீண்டும் தண்ணீ ரொடு கூடியவழி அதனுடன் பிரிவின்றியடங்குமாறு போலப் பெத்தகாலத்து இறைவனது வியாபகத்துள் பொதுவாக அடங்கிக்கிடந்த ஆன்மா, முத்திக் காலத்துச் சிறப்பு முறையில் அடங்கியொன்றும் என்பதாம்.

‘அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்று உருச் செய்த’ என்பது, இறைவனருளால் உயிர் கருவி கரணங்களைப் பெற்ற பெத்தநிலையையும், அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாதல் என்பது முத்தி நிலையையும் குறித்தற்கெழுந்த உவமைகளாகும்.

பூரண அறிவு விளங்கி ஆன்மா இறைவன் வசமாய் ஒன்றுபட்டுக் கூடுங்கால் பண்டை ஏகதேச அறிவுகெட்டுக் கூடுமோ? கெடாது கூடுமோ? என ஐயுறுதல் இயல்பே. ஏகதேச அறிவுகெட்டுக் கூடுமெனின் அறிவாகிய குணங் கெடவே ஆன்மாவாகிய குணியும் கெடும் எனப்பட்டு இரு பொருள் ஒன்றாய்க் கூடிய தென்றல் இயலாது. ஏகதேச அறிவு கெடாத வழி வியாபகப் பொருள் விளங்குதலின்மையால் அவ்விரண்டும் ஒன்றாகக் கூடுமாறில்லை. மற்று எவ்வாறுகூடும் எனின், ஏகதேசவறிவைச் செய்யும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் மட்டும் கெட்டொழிய, ஆன்மா தண்ணீரைச் சேர்ந்த உப்புப்போல இறைவன் திருவடியைத் தலைப்பட்டு இறைவனுக்கு அடிமையாம். இறைவன் திருவடி உயிரை விட்டு வேறாதலின்றி இயைந்து நிற்கும் என்பது,

‘நசித்தொன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா
நசித்திலதேல் ஒன்றாவ தில்லை - நசித்துமலம்
அப்பணைந்த உப்பின் உளமணைந்து சேடமாம்
கப்பின்றாம் ஈசன் கழல்’ (சிவ-11. அதி-2)

எனவரும் உதாரண வெண்பாவாற் புலனாம்.