பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

திருமந்திரம்


தன் கண்ணதாகிய கடின குணம் நீங்கி அப்பினைச் சேர்ந்து ஒன்றாகிய உப்பு, ஆன்மா மலம்(நசித்து முதல்வனைச் சேர்ந்து ஒன்றுபடுதல் மாத்திரைக்கு உவமையாயிற்று. மலம் நசித்தலாவது தனது மறைத்தற் சத்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையே பிறிதன்று என்பது,

‘பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கொடுங்கிப் போயகலத்
தன்வாளே யெங்குமாந் தன்மையால்’

என்னும் உவமையாற் புலனாம். இருபொருள் ஒன்றாய்க் கலந்து ஒன்றினுள் ஒன்று அடங்கி இரண்டுங் கெடாது ஒன்றாய்த் தோன்றுதற்கு அப்பணைந்த உப்பு உவமை. பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களும் வியாபக வியாப்பியங்களாய் நிற்குமாற்றிற்குத் ‘தண்கடல் நீருப்புப் போல்’ என உவமை கூறுவர் மெய்கண்டார். உப்பு நீரொடு விரவுதலன்றிக் கடலொடு விரவாமை போலப் பாசமும் பசுவைச் சார்தலன்றிப் பதியைச் சாராமை இவ்வுவமையாற் புலனாம்.

27. திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே (138)

இறைவன் திருவடியே ஆன்மாக்களுக்கு எல்லாமாய்ப் பயன் விளைக்கும் என்கின்றது.

(இ-ள்) ஓர்த்துணருங்கால் இறைவன் திருவடியே சிவமாகிய மெய்ப் பொருளாகும். உள்ளத்திற் சிந்திக்குங்கால் ஈசனுலகாவதும் திருவடியே. பொருள் சேர் புகழ்த் திறத்தினைச் செப்புங்கால் சென்றடைதற்குரிய சிவகதி யாவதும் திருவடியே. உள்ளத்தே தெளிந்துணர வல்லார்க்குப் புகலிடமாவதும் திருவடியே எ-று.