பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

61


திருவடியென்றது இறைவனது இன்னருளாகிய சத்தியை. தேர்தல் - ஓர்ந்து உள்ளவாறு நோக்கி ஆராய்தல். ஒர்த்துள்ளவாறுணர்வார்க்குப் பிறப்பொழியச் செம்பொருளாம் சிவம் வெளிப்படுமென்பார், ‘தேரில் திருவடியே சிவமாவது’ என்றார். சிந்தித்தல் - அப்பொருளைப் பலருடன் கற்றுப்பயிலல். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் மற்றீண்டு வாரா நெறியாகிய சிவலோகத்தைத் தலைப் படுபவர் என்பார், ‘சிந்திக்கில் திருவடியே சிவலோகம்’ என்றார் . இறைவனது பொருள் சேர் புகழ்த்திறங்களைச் செப்பினர் இருள் சேர் இருவினையும் நீங்கித் தெருள் பெற்று நன்னெறியினை அடைந்துய்வர் என்பார், ‘செப்பில் திருவடியே செல்கதியது’ என்றார். திருவடியினையே சிந்தையில் இடைவிடாது தியானித்துத் தெளிந்துணர்தலாகிய நிட்டைகூட வல்லாரைத் திருவடியே புகலிடமாய் அமைந்து ஏன்றுகொள்ளும் என்பார், ‘உள் தெளிவார்க்குத் திருவடியே. தஞ்சம்’ என்றார். தஞ்சம் - புகலிடம்; பற்றுக்கோடு. இறைவன் திருவடிகளைக் கற்றலும் கேட்டலும் சிந்தித்தலும் தெளிதலும் செய்வார் பெறும் பயன் இதனுல் உணர்த்தப்பெற்றமை காணலாம்.

28. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. (139)

குருமுகமாகப் பெறுவனவே உண்மை ஞானங்களாம் என்பதுணர்த்துகின்றது.

(இ-ள்) குருவின் திருமேனியைச் சிவனுருவெனக் காணுதலே ஞானத்திற் சரியையாம். குருவின் திருப்பெயரை இறைவன் திருப்பெயராகச் சொல்லித் துதித்து வழிபடுதலே ஞானத்திற் கிரியையாம். குருவின் அருளுப-