பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

63


மாற்ற மனங்கழிய நின்ற இறைவன் மேலான திருவைந்தெழுத்தாலும் கருணையினாலும் திருமேனி கொண்டு பராசத்தியாகிய திருவம்பலத்தை இடமாகக் கொண்டு ஒரு பாகத்தே விளங்கும் மலைமகளார் காண ஆடியருளும் ஆனந்தக் கூத்தினைக் கண்கள் களிகூரக் கண்டு வேதங்கள் தொழுதேத்த ஞானாகாசமாகிய பெருவெளியையடைந்து இன்புற்றனர் என்பதாம்.

30. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீயினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்வீழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. (143)

குருவின் உபதேசத்தால் வீடு பயக்கும் உணர்வாகிய ஞானம் பெறும் ஆன்மா, நில்லாதவற்றின் இயல்பினை யுணர்ந்தன்றி அவற்றிலுள்ள பற்று நீங்கி நிலையுடைய பொருளை நாடுதல் இயலாதாதலின் யாக்கை, செல்வம், இளமை, உயிர் என்பவற்றின் நிலையாமையை யுணர்த்துகின்றார். இப்பாடல் யாக்கை நிலையாமை உணர்த்துகின்றது.

(இ-ள்) (பானை, சட்டி, மடக்கு முதலிய பல்வேறு கலங்களுக்கும்) முதற் காரணமாயுள்ளது மண் ஒன்றே யென்றுணர்வீர். அம்மண்ணாலாகிய கலம் (சுடப்படாத பச்சை மட்கலமும் சுடப்பட்ட மட்கலமும்) என இருவகைப்படும். அவற்றுள் தீயினைச் சேர்ந்து சுடப்பட்ட மட்கலம் (நீராற்கரைதலின்றி) உறுதியான தன்மையைப் பெற்றது. (அங்ஙனம் சுடப்படாத வெயிலிற் காய வைக்கப்பட்ட பச்சை மட்பாண்டம்) வானிடத்தினின்று மழைத்துளி வீழ்ந்தால் மீண்டும் மண்ணாகக் கரைந்து உருச்சிதைந்தொழியும். (அதுபோன்று நாம் பெற்றுள்ள மாயாகாரிய-