பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

65


இருவகைப்பாத்திரம் என்பதற்கு ஆணும் பெண்ணுமாகிய இருவகையான உடல் எனவும், தூலசூக்குமமாகிய இருவகைச் சரீரங்கள் எனவும் பச்சை மட்குடம் மழை நீரில் கரைந்துபோவதுபோல் தூல உடம்பு தீயினில் அழிந்துபோகும் எனவும் விளக்கம் கூறுதலும் உண்டு. பாத்திரத்திற்குக் காரணமாகிய மண் ஒன்றேயாயினும் அதனானியன்ற பாத்திரத்தைச் சுடுமட்கலம் எனவும் பசு மட்கலம் எனவும் இருவகையாகப் பகுத்துரைத்தலுண்டென்பதும் அவற்றுட் பசுமட்கலம் நீர்பட்டால் எளிதிற் சிதையுமென்பதும் ‘பசுமட்கலத்துள் நீர் பெய்திரீஇயற்று’ எனவரும் திருக்குறளாற் புலனாம்.

சுடப்படாத பசுமட் பாண்டமானது மழைத்துளிபட்ட அளவே கரைந்து சிதையும். அத்தகைய பசுமட்கலம் தீயின்கண் ஆழ்ந்து கிடந்து சூளையிற் சுடப்பட்ட பின் எத்தனை ஆண்டுகள் தண்ணீருட் கிடந்தாலும் உருச்சிதையாது. அதுபோன்று உலகபோகமாகிய பசுமைத் தன்மைத்தாகிய மாந்தரது உரனில்லாத நெஞ்சம் மழைத்துளிபோலும் சிறிய துன்பங்கள் வந்த அளவிலேயே நிலை கலங்கி யழியுமியல்பினதாயினும் இறைவனது திருவருளாகிய பெருந் தீயில் ஒடுங்கி யாழ்ந்திருந்தமையால் திண்ணெண்னும் தன்மையினதாய் எத்தகைய இடர்கள் அடுக்கிவரினும் நிலைகலங்காத் தன்மையடையும்படி இடை மருதீசன் ஆட்கொண்டருளிய திறத்தை விரித்துரைப்பது,

எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பில்
          இன்றுளி பட நனைந்துருகி
அழலையாழ்பு உருவம் புனலொடுங் கிடந்தாங்கு
          ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலையாழ் நெஞ்சம் இடர்படாவண்ணம்
          தூங்கிருள் நடுநல் யாமத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
          மருவிடந் திருவிடை மருதே.

என வரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவாகும்.