பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

திருமந்திரம்


எளிதில் அழிந்தொழியும் இயல்பினது நிலையிலாத யாக்கை. இறைவனை இடைவிடாது நினைந்து போற்ற அம்முதல்வன் அவ்வுடம்பினை இடமாகக் கொண்டமையால் வினேப்பயனாய் வந்த இழிந்த யாக்கையும் இறைவன் உவந்தெழுந்தருளியிருத்தற்கேற்ற உயர்ந்த நிலையுடைய விமானமாக விளங்கியதென்பதனை,

புனல்பட வுருகி மண்தழல் வெதும்பிப்
        பூம்புனல் பொதிந்துயி ரளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத்தென்
        மனநெக நெகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே
        முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
வினைபடும் உடல் நீபுகுந்து நின்றமையால்
        விழுமிய விமான மாயினதே.

எனக் கருவூர்த் தேவர் அருளிச் செய்கின்றார்.


31. பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி யவருடன் வழி நடவாதே. (144)

நிலைபெற்ற யாக்கையின்கண் வாழும் மாந்தர் தாம் மேற்கொள்ளும் விரத ஞானங்களாலல்லது உற்றார் உறவினரால் நிலைபேறெய்துதல் இயலாது என்கின்றது.

(இ-ள்) வினைப் போகங்களாகிய பண்டங்களைப் பெய்து வைத்த சிறு குடிலாகிய உடம்பு நெடுநாட்களாகப் பயன்படுத்தப்பட்டுப் பழையதாய்ச் சிதைந்து வீழ்ந்தபோது அக்குடிசையைச் சார்பாக வைத்து உண்டு வாழ்ந்த மனைவியும் மக்களும் அதன்கண் வாழ்ந்த உயிரோடு உடன்செல்ல மாட்டார்கள். மாந்தர் மேற்கொண்டு நிகழ்த்திய விரதமும் ஞானமும் அன்றி வேறு அவரால் ஈட்டப்பட்ட எவ்வகைப் பொருள்களும் அவருடன் வழித் துணையாகச் செல்லுதல் இல்லை எ-று.