பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

67


பண்டம் பல பிறவிகளில் ஈட்டப்பட்டு அவ்வுடலில் நுகர்தற்கென முகந்து கொள்ளப்பட்ட பிராரத்த வினைகளாகிய சரக்கு. கூரை-ஓலையினால் வேயப்பெற்ற எளிய குடிசை. கல்லால் கட்டப்பட்ட வீடுகளைப்போன்று பல ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும் வன்மையின்றிச் சில்லாண்டிற் சிதையும் இயல்பினது என்பார், மனை என்னாது கூரை என்றார். பழகுதல்-பல நாள் புழங்கப்பட்டு வெளியே பணி மழை வெயிலாலும் கரையான் முதலியவற்றாலும் சிதைவுறுதல். விழுதல்-முற்றிலும் அழிந்து போதல். உண்பிப்பார் போன்று தோன்றி இதனாற் பயன் நுகர்ந்தவர் என்பது புலப்படுத்துவார் உண்ட அப்பெண்டிரும் மக்களும் என்றார். கொண்ட-வழித்துணையாகக் கொள்ளப்பட்ட. விரதம்-இன்ன அறத்தைச் செய்வேன் எனவும் இன்ன பாவத்தை ஒழிவேன் எனவும் தத்தம் ஆற்றலுக்கேற்ப வரையறுத்துக் கொள்ளும் ஒழுக்கமாகிய நியமம். அவையாவன அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா வொழுக்கந் தவிர்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை முதலியன. ஞானமாவது வீடு பயக்கும் உணர்வு. அது திருக்குறளில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என்னும் நான்கதிகாரங்களில் வைத்து உணர்த்தப்பெறும். இவற்றையே சார்புணர்ந்து சார்புகெட ஒழுகல் என்பார். மண்டுதல்-முற்பட்டு விரைந்து நெருங்குதல். வழி நடத்தல்-வழித் துணையாக உடன்சென்று தளர்வகற்றித் தாங்கிக் கொள்ளுதல். நடவாது, ஒருமை பன்மை மயக்கம்.


32. ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. (145)