பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

திருமந்திரம்


யாக்கை நிலையாமை உணர்த்தும் வாயிலாக உற்றார் சுற்றத்தார் முதலியோரது அன்பின் நிலையாமையும் உடன் உணர்த்துகின்றது.

(இ-ள்) (பண்டம் பெய் கூரையாகிய உடல் வீழ்ந்த பின்னர் அதனை அடக்கஞ் செய்தற்கென) ஊர் மக்களெல்லொரும் ஒன்றுகூடிப் பேரிரைச்சலிட்டு அழுது தீர்த்து முன் அவ்வுடம்பிற்குரிய இயற்பேரினை நீக்கிப் பிணம் என்ற பெயரைக் கொடுத்துச் சூரை என்னும் முட்செடி வளர்ந்த சுடுகாட்டிற் கொண்டு சென்று தீ மூட்டிப் பின்பு நீரினில் மூழ்கி (அவ்வுடம்பினோடு ஒருவர் வாழ்ந்தார் என்னும்) எண்ணத்தையும் (விரைவில் விட்டொழித்துத் தத்தமக்குரிய அலுவல்களிலகப்பட்டு) மறந்தார்கள்.

ஊர்-இடவாகு பெயர். ஒலிக்க அழுதல்-தமது பிரிவாற்றாமை பலர்க்கும் புலப்படப் புலம்புதல். பேர்-பெற்றோர்கள் விருப்பத்துடன் வைத்த பெயர். சிறப்புடைய அப் பெயரை நீக்கி இழிவுடைய பிணம் என்ற பெயரை அவ்வுடம்புக்கு இடுவார் என்பார், 'பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு' என்றார். மூழ்குதல் - பிணத்தினை நெருங்கிய வாலாமை (உடல் மாசும் உள்ளத்தின் மாசும்) நீங்கக் குளித்தல். நினைப்பு ஒழிதல்-இருந்தார் என்ற எண்ணமும் அறவே நீங்க மறந்தொழிதல்.


33. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை யுண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே யிறைநொந்தது வென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே (148)

உலகில் யாக்கை நிலையாமையே மிகவும் நிலைபெற்றதென உணர்த்துகின்றது.