பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

திருமந்திரம்


உயிரோடு கூடியுள்ள நிலைமைக்கண்ணும் உடலிற் பிரியாதுள்ள கண் முதலிய கருவிகள் உயிர்க்குப் பயன்படா தொழிதலை விளக்கியவாறு. உடலொக்கப் பிறந்தது கண்ணது ஒளி, காண் ஒளி என இயையும். அவ்வொளி கண்கள் உடலுடன் கூடியிருக்கும் நிலையிலும் உயிர்க்கோ அவ்வுடலுக்கோ சிறிதும் பயன்படாதவாறு போல உடைமையாகிய செல்வமும் நும்முயிர்க்கோ உடலுக்கோ சிறிதும் பயன்படாமையைக் கண்டுணர்வீராக என்பார், ‘கண்டுகொளீரே’ என்றார். ‘என்னது மாடு’ என்ற தொடர்ப்பொருளை ‘எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை’ எனவரும் நாலடியார் விளக்குகின்றது.

37. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்க லுமாமே. (172)

நிலையற்ற பொருளால் உயிர்வாழ்க்கை நிலைபெறுதல் இயலாது எனவுணர்த்துகின்றது.

(இ-ள்) (எப்பொருட்குஞ் சார்பாய் நிலைபெற்ற பொருளாகிய தெய்வம் ஒன்றுண்டு என) அறிவுடையோர் தெளிவிக்கத் தெளிந்துணர்மின். அங்ஙனம் தெய்வமுண்டெனத் தெளிவு பெற்றோர்களே மீண்டும் அவ்வுறுதியினின்றும் பிறழ்ந்து சிந்தையிற் கலக்கமுறாதீர். பேராற்று வெள்ளம் போன்று (ஒரு கால் மிக்கும் மறுகால் குறைந்தும்) வரும் நிலையாப் பொருள் காரணமாக மகிழ்ந்தும் வருந்தியும் மிகவும் கலக்கமுற்று மனங் குழம்பாமல் உங்கள் செல்வத்திற் கொண்டுள்ள பற்றினை விலக்கி அறவே களைவீராக. உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்தும் கூற்றுவன் வருங்காலத்து அப்பொருளைக்