பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

திருமந்திரம்


நிலையுடையதன்று என்பதனை அகக் கண்ணில்லாதார் தெளிய உணர்கின்றிலர். (தம் வீட்டிலே பிறந்த) பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப்பருவம் நீங்கி முதுமையையடைந்து எருதாய்ச் செயலற்று இறத்தலைக் கண்ட பின்னரும் இப்பரந்த உலகில் வாழும் மாந்தர் தமது இளமையும் அங்ஙனம் நிலையாதென்னும் உண்மையைத் தெளிய அறிகின்றிலரே (என்னே அவர்தம் பேதைமை?) எ-று. -

விழி என்றது, இங்கு ஞான நாட்டத்தினை. குழக் கன்று - பாலுண்ணும் பருவத்து இளங்கன்று. மழவுங் குழவும் இளமைப்பொருள என்பது தொல்காப்பியம். மூத்தல் - முதுமையடைதல். எருது என்றது உழுதற்கும் பெரும்பாரம் இழுத்தற்கும் ஏற்ற ஆற்றலுடைய காளைப் பருவத்தினை இழந்து முதுமையெய்திய எருதினை. விழுதல்-இறத்தல். உயிரல் பொருள் உயிர்ப் பொருள் ஆகிய எவ்வகைப் பொருட்கண்ணும் இளமைச்செவ்வி நிலைத்தலில்லை என்பதனை இளஞாயிற்றிலும் இளங்கன்றிலும் வைத்து அறி வுறுத்திய திறம் உணரத்தக்கதாகும்.

40. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே. (181)

இதுவும் அது.

(இ- ள்) உயிர்வாழ்வுக்கென நியமிக்கப்பட்டு நின்ற வாழ்நாள் பாலுண் பருவத்துப் பாலன் என்றும் நடுவயதினனாகிய இளைஞன் என்றும் முதிர்ந்த பருவத்தினனாகிய விருத்தன் என்றும் இங்ஙனம் பல்வேறு பருவங்களாய்க் கழிவனவற்றைக் கண்டிருந்தும் இளமை நிலையாதென்ப-