பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

திருமந்திரம்


(இ-ள்) தழைத்து வளர்கின்ற தளிர்களையும் குளிர்ந்த மலர்களையும் உடைய மரத்தின் கிளையில் ஈனிலாகிய கூட்டினை இழைக்கப்பெற்று வாழ்கின்ற பறவைக்குஞ்சுகள் எல்லாம் அதன்கண்ணேயே நிலையாகத் தங்கி விடாமல் காலம் வந்தபோது வேற்றிடம் நாடிச் செல்லுமாறுபோல உயிர் உடம்பினை விட்டுப் பிரிந்து செல்லுதலைக் கண்டு வைத்தும் எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைப் போற்றி வழிபடாதார் (கூற்றுவன் தம்மை) அழைக்கும் காலத்து அவர்கள் தாம் செய்வது இன்னதென்றறியாது அலமரும் அறிவிலிகளாவர் எ-று.

தழைத்தல் - செழித்து வளர்தல். கொம்பு - கிளை. இழைத்தல் - பொறையுயிர்த்தற்குரிய 'ஈனில்' என்னும் கூட்டினைக் கட்டுதல்.

“உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறாவெண் பூக்கொழுதும்” (குறுந்-85)

என்றார் குறுந்தொகையினும்.

‘மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி’ (திருவாருர் மும்மணிக்-19)

என்பது சேரமான் பெருமாள் நாயனார் திருப்பாடல்.

இறத்தல்- கூட்டை விட்டுப் பறந்து செல்லுதல்.

‘குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு’

என்பது திருக்குறள்.

“வீயாது
உடம்பொடு நின்ற உயிருமில்லை
மடங்கலுண்மை மாயமோ வன்றே” (363)