பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

திருமந்திரம்


43. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே. (196)

உயிர் நிலையாமை யுணர்ந்தோர் தவிர்வனவும் செய்வனவும் இவையென வுணர்த்துகின்றது.

(இ - ள்) பொறாமையாற் கோட்டமுடைய சொற்களைப் பேசி அறம் சிதைய நில்லாதீர்கள். கொடுமையுடைய நெஞ்சத்தராய்ப் பிறர்க்குரிய பொருளைக் கவர எண்ணாதீர்கள். (உயிர் உடம்பில் நிலைபெற்றிருக்கும் காலத்திலேயே) செம்மையுடைய நெஞ்சத்தினராய் வாழ்க்கையிற் சிறந்து விளங்கி உண்ணுங் காலத்து ஒரகப்பையாவது நும்மை வந்து அடைந்தோர்க்குக் கொடுத்து உண்பீர்களாக எ -று.

அவ்வியம்-பொறாமை; கோட்டமுடைய சொற்கள். வெவ்வியன்-கொடுமையுடையோன். செவ்வியன்-செப்பமுடையவன்; நடுவு நிலைமையுடையோன். தவ்வி-அகப்பை. தலைப்படுதல்-நேர்படுதல்; வந்தடைதல்.

கொல்லாமை


ஐயறிவுடையன முதல் ஓரறிவுடையன வீறாய உயிர்களை மறந்துங் கொல்லுதலைச் செய்யாமை.

44. பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. (197)