பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

உடைய மாமரமாக நின்ற அரக்கர் முதல்வனாகிய சூரபன் மனை வெட்டிக் கொன்ற—களங்கம் அற்ற வெற்றியினையும் முழுதும் அறிய முடியாத சிறந்த புகழினையும் செம்மையான வேலினையும் உடைய சேயோனுமாகிய முருகப் பெருமானுடைய திருவடியைச் சென்றடையும் சிறந்த உள்ளத்துடன், நலம் செய்யும் தன்மையதாகிய வீட்டுலகினை விரும்பிவாழும் பயணத்தினை நீ விரும்பி மேற்கொண்டனையெனில், பலவகையில் நல்ல உள்ளத்திலே உள்ள இனிய விருப்பம் நிறை வேறும்படி இப்பொழுதே நீ எண்ணிய நல்வினைப் பயனைப் பெறுவாய்! (அன்பனே! முருகன் எழுந்தருளியுள்ள இடங்களை ச் சுட்டிக் கூறுகிறேன், கேள்!)

மதுரையைச் சார்ந்த திருப்பரங் குன்றம்

(67-77) போருக்கு வருவார் வருக என்று கூறி ஏற்றிய—விண்ணில் நெடுந் தொலைவு உயர்ந்துள்ள நீண்ட போர்க் கொடியினையும், நூலால் வரிந்து கட்டிச் செய்த பந்தும் பாவையும் (அறுக்கும் எதிரிகள் இன்மையின்) வறிதே தொங்கிக் கொண்டு கிடப்ப, பகைவரையெல்லாம் அழித்து விட்ட (காரணத்தால்) — போர் என்பதே அற்றுப் போன பெருவாயிலையும், திருமகள் அமர்ந்துள்ள — வஞ்சகம் இல்லாத அங்காடிக் கடைத்தெருவினையும், மாட மாளிகைகள் மிகுந்த மற்ற தெருக்களையும் உடைய மதுரையின் மேற்குப் பக்கலில் உள்ள, மிக்க சேறு பொருந்திய அகன்ற வயலிலே விரிந்து மலர்ந்த—முள்ளோடு கூடிய தண்டையுடைய தாமரை மலரிலே இரவில் தூங்கியும் மிக்க விடியற்காலையில் தேன் கமழும் நெய்தல் பூவை ஊதிக்கோதியும் ஞாயிறு தோன்றிய பின்னர் கண்போல் மலர்ந்துள்ள விருப்பமான சுனைப் பூக்களிலே அழகிய சிறகுடைய வண்டுகளின் அழகிய கூட்டம் ஆரவாரிக்கும் வளமுடைய திருப்பரங் குன்றத்திலே விரும்பி எழுந்தருளியிருத்தலையும் உரிமையாகக் கொண்டவன் முருகன் அத்திருப்பரங்குன்றம் அல்லாமலும், —