23
கருவி மிக்கெழுந்து ஒலிக்கவும், வெண்மையான சங்கு ஊதி முழங்கவும். வலிமையைத் தன்னிடம் கொண்டுள்ள-இடியேறு போன்ற முரசத்தின் முழக்கத்துடன், பல பீலியை உடைய மயில் வெற்றிக் கொடியின் பாலிருந்து அகவவும், வானகத்தின் வழியாக விரைந்து செல்லுதலைக் கருத்திற் கொண்டு, உலகம் புகழ்கிற-ஓங்கிய உயர்ந்த சிறந்த பெருமையுடைய (திருச்செந்தூர் ஆகிய) திருச்சீரலைவாய் என்னும் திருப்பதியில் சென்று எழுந்தருளியிருத்தலும் முருகனுக்கு நிலை பெற்ற பண்பாகும். அத்திருச்சீரலைவாய் அல்லாமலும், -
முனிவர்கள் முன்புகுதல்
(126-137) மரவுரியினைத் தொடுத்துச் செய்த உடையினை உடுத்தவரும், சிறப்புடன் வலம்புரிச்சங்கு போன்ற வெள்ளிய நரைத்த முடியினைக் கொண்டவரும், அழுக்கு இன்றி விளங்கும் தூய வடிவினைப் பெற்றவரும், மானின் தோல் போர்த்திய—தசை (சதை) கழிந்த மார்பு அமைந்த எலும்பு வெளியில் தோன்ற உலவும் உடம்பை உடைய வரும். நல்ல பகல் பொழுதுகள் பலவும் உணவு நீக்கிய வரும், பகையுடன் படுசீற்றம் துறந்த உள்ளத்தினரும், எல்லாம் கற்றவரும் அறியமுடியாத நுண்ணிய அறிவு வாய்க்கப் பெற்றவரும், கற்றவர்க்கெல்லாம் தாம் உயர் எல்லையாக நிற்கும் தலைமை பெற்றவரும், காமத்துடன் கடிய சினத்தையும் நீக்கிய பட்டறிவினரும், துன்பம் ஒரு சிறிதும் உணராத பண்பினரும், மேன்மை பொருந்த—கசப்பு அற்ற நல்ல பட்டறிவினை உயைவரும் ஆகிய முனிவர் பெருமக்கள் முன்னே சென்று புக,—