27
(151-154) வெள்ளிய ஆனேற்றை (இடபத்தை) வலப் புறத்தே கொடியாக உயர்த்திய—பலரும் புகழும் திண்ணிய தோள்களை உடைய—(இடப்பாகத்தே) உமையம்மை விரும்பி அமர்ந்துள்ள--இமைக்காத மூன்று கண்களையுடைய-முப்புரங்களை எரித்து அழித்த—வலிமை மிக்க செல்வனாகிய உருத்திரனும்,
(155-159) (நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளே இயற்றி முடித்த—பகைவரை முன்னேறி அழித்த வெற்றிச் சிறப்புடனும் ( வி ள ங் கி ), நான்காக அமைந்த மருப்புகளையும் (தந்தங்களையும்) அழகிய நடையினையும் உடைய—தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் — திருமகளின் விளக்கம் பெற்ற செல்வனாகிய இந்திரனும்,
(160-165) இந்திரன், நான்முகன். திருமால், உருத்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வங்களுள் (முருகனால் சிறைப்பட்டுக் கிடக்கும் நான்முகன் நீங்கலாக ). நல்ல திருப்பதிகள் நிலைபெற்றுள்ள உலகினைக் காக்கும் ஒப்பற்ற செயல் புரியும் கொள்கை கொண்ட —பலரும் புகழும் திருமால், உருத்கிரன், இந்திரன் ஆகிய மூவரும் தாம் தத்தம் தலைமையினைப் பெற வேண்டியும், காவலுடைய மண்ணுலகில் வந்து (முருகன் எதிர்) தோன்றி, (திருமாலின் திரு உந்தியாகிய) தாமரை ஈன்ற —குற்றம் இல்லாத பல ஊழிகளைப் படைக்கும் நான் முகனாகிய ஒருவன் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிச் சிறைவீடு செய்ய வேண்டியும் முருகனைக் கண்டுகொண்டிருக்கவும்,