பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

யாய் உடையவனாய், குற்றமற்ற அழகிய சேவல் கொடியோனாய், நெடிய பெருமையுடையவனாய், தொடி அணிந்த தோளனாய், யாழ் நரம்பை மீட்டினால் ஒத்த இனிய குரலுடைய மகளிர் குழுவுடனும் உதரபந்தனம் (இடைக் கச்சை) கொண்ட் நறிய தண்ணிய சாயலுடைய மகளிருடனும், இடுப்பிலே உடுத்த-நிலத்திலே தொங்குகிற துகிலை உடையவனாய், முழவு போல் திரண்ட பெரிய கைகளால் இசைவாக ஏந்தி மெல்லிய தோளுடைய பல பெண்மான்கள் போன்ற பெண்டிரைத் தழுவிக்கொண்டு அனைவர்க்கும் தலையளி செய்து மலைகள்தோறும் சென்று ஆடல் புரிதலும் (அவனுக்கு) நிலைத்த பண்பாகும். அவ்வாறு குன்று தோறும் ஆடி அமர்ந்திருத்தல் அல்லாமலும்,-

முருகன் எழுந்தருளும் பிற இடங்கள்

(218-226) சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பரப்பி ஆடு அறுத்து, கோழிக் கொடியுடன் அனைத்தையும் உரிய இடத்தில் அமைத்து ஊர்கள் தோறும் நடாத்தும் சிறப்பு மிக்க திருவிழாக்களிலும்.—அன்பர்கள் போற்ற விருப்பங்கொள்ளும் சிறப்பிடங்களிலும்,—வேலுடன் முருகன்போல் கோலம் கொண்டவன் அழகுபெற அமைத்து வெறியாடுகின்ற (சாமி யாடுகின்ற களங்களிலும், காடுகளிலும், சோலைகளிலும், அழகு மிக்க ஆற்றிடைக் குறைகளிலும் (ஆற்றிடைத் திட்டுக்களிலும்), ஆற்றங் கரைகளிலும், குளக்கரைகளிலும், இன்ன பல வேறு இடங்களிலும், நாற்கூட்டிடங்களிலும் (நாற் சந்திகளிலும் , முக் கூட்டிடங்களிலும் (முச் சந்திகளிலும்), புதிய மலர்களையுடைய கடம்ப மரங்களிலும், ஊர் நடு மன்றமாகிய மரத்தடியிலும், பொது அம்பலங்களிலும், கடவுளாகக் கருதி நட்டு நிறுத்திய கல் தறிகளிலும்,—

முருகாற்றுப் படுத்த நகர்

( 227-285) கோழிக் கொடியோடு பொருந்த அணி செய்து, நெய்யுடன் வெண் சிறு கடுகைக் கலந்து அப்பி,