37
அழகிய மறைப்பாடலை வாய்க்குள் உரைத்துக் கொண்டே வழிபட்டு, செழுமையான பூக்களைத் தூவி, வேறுபட்ட அமைப்பையுடைய இரண்டு உடைகளை நீளத் தொங்கும் வாட்டத்தில் ஒன்றும் அதன்மேல் குறுக்கு வாட்டத்தில் ஒன்றுமாக ஒருசேர உடுத்து, செந்நிற நூலைக் கையிலே காப்பாகக் கட்டி, வெண்மையான பொரியினைச் சிதறித் தூவி, மத வலிமை மிக்க பெரிய காலையுடைய கொழுத்த கிடாவின் குருதியோடு (இரத்தத்தோடு) கலந்த தூய வெள்ளரிசியினைச் சிறுபலியாகப் போட்டுப் பல பிரப்புகளை (அரிசிக் கலங்களைப்) பரவலாக வைத்து, சிறிய பசு மஞ்சளுடன் நறுமணப் பொருள்களையும் தூவித் தெளித்து,
(236-244) பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலையினையும் நறுமண மிக்க குளிர்ச்சியான மற்ற மாலைகளையும் ஒருநிகர் அளவாக அறுத்து அசைந்து கொண்டிருக்குமாறு தொங்க விட்டு, செறிவான மலைச்சாரலில் உள்ள நல்ல ஊர்கள் வளம் பெறுக என வாழ்த்தி, நறுமணப் பொருள்களைப் புகைத்து (தூபமிட்டு), மலை நிலத்திற்கு உரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடி, முழங்கும் இசையையுடைய அருவியொலியுடன் சேர்ந்து இனிய இசைக் கருவிகளும் ஒலித்துக் கொண்டிருக்க, பல்வேறு நிறங்களையுடைய பலவகை மலர்களையும் தூவி, அச்சம் தோன்றக் குருதியோடு (இரத்தத்தோடு) கலந்த சிவந்த தினை அரிசியைப் பரப்பி, தெய்வம் ஏறிய குறக் குடிமகள் முருகனுக்கு உகந்த இசைக்கருவிகளே இசைத்து மாறுபடுவோர் அஞ்சும்படி இயங்கி, முருகன் ஆண்டு எழுந்தருளும்படி வழிப்படுத்திக் கொணர்ந்த- ஒருவகைத் தெய்வ அச்சம் (பயபக்தி) நிறைந்த பெரிய நகரின்கண்ணே