பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

வானத்தை மோதும் நீண்ட மலைப்பகுதியிலே ஞாயிற்றின் வட்டம்போல் தேனீக்கள் தொடுத்துக் கட்டிய—குளிர்ந்த—மணம் கமழ்கிற-விரிந்த தேன்கூடு சிதைந்து அழியவும், நல்ல பல ஆசினிப் பலாவின் முதிர்ந்த சுளைகள் நீரோடு கலக்கவும், மிகுந்த மலை உச்சியிலுள்ள சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர்ந்து கொட்டவும், யூகம் என்னும் கருங்குரங்குடன் கரிய முகமுடைய முசுக்கலை என்னும் குரங்கும் நடுங்கவும், புள்ளி பொருந்திய மத்தகம் உடைய பெரிய பெண்யானை குளிரால் உதறவும் நீரை வீசியெறிந்து, பெரிய ஆண் யானையின் முத்துக்களை உடைய நீண்ட கொம்புகளை இழுத்துக் கொண்டு வந்து , நல்ல பொன்னும் மணியும் தம் ஒளிநிறம் விளங்கச் செய்து, பொன் துகளைக் கொழித்துக் கொண்டு,

(அருவியின் செயல்—தொடர்ச்சி)

(307-317) வாழையின் முழு மரமும் ஒடிந்து சாயவும் தென்னையின் பெரிய இளநீர்க் குலை உதிரவும் நீரை வீசியெறிந்து தாக்கி, மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயவும், பின்புறத்தே பீலி பொருந்திய இளநடையுடைய மயில்கள் பல சேர்ந்து அஞ்சவும், வலிய பெட்டைக் கோழிகள் இரிந்தோடவும். ஆண் பன்றியுடன், உள்ளே வெளிறு உடைய (வயிரம் இல்லாத) கரிய பனை மரத்தின் புல்லிய செறும்பு போன்ற கருமயிரோடு கூடிய உடம்பினையும் வளைந்த காலடியினையும் உடைய கரடி பெரிய கல் பிளப்புக் குகையிலே சென்று அடைந்து கிடக்கவும், கரிய கொம்புகளையுடைய ஆமா இனத்தின் நல்ல காளைகள் கதறிக் கத்தவும் பல்வேறு செயல்கள் புரிந்து உயர்ந்த மலையுச்சியிலிருத்து ‘இழும்’—‘இழும்’ என்னும் ஒலியுடன் கீழ்நோக்கி இறங்கி ஓடிவரும் அருவியினை உடைய—பழம் முதிர்ந்து கனிந்த சோலை சூழ்ந்த — ‘பழமுதிர் சோலைமலை’ என்னும் மலைக்கும் உரிமை உடையவனாவான் அம்முருகன் — அவனது அருள் பெறுக!

திருமுருகாற்றுப் படைத் தெளிவுரை

முற்றும்.