உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உரைப் பாயிரம்

ஆற்றுப்படை:

ஒருவர் ஓரிடத்தில் தாம் பெற்ற பெருவளத்தைப் பெறாத பிறர்க்கும் அறிமுகப்படுத்தி அவ்விடம் சென்று அத்தகைய வளத்தைப் பெற்றுவருமாறு வழிப்படுத்தி யனுப்புதல் ஆற்றுப் படையாகும். (ஆற்றுப்படை = ஆற்றுப்படுத்துதல் = வழிப் படுத்துதல்) இப்பண்பு மக்கட் பண்புகளுள் உயரிய எல்லைக் கொடுமுடியாகும் முருகனின் அன்பர் ஒருவர் மற்றோர் அன்பரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்ததே திருமுருகாற்றுப்படை என்னும் நூல். இது 817 அடிகள் கொண்ட ஒரு முழுநீளப் பாட்டாகும்.

ஆசிரியர்:

சங்க காலப் பத்துப் பாட்டுள் முதல் பாட்டாக உள்ள திரு முருகாற்றுப்படையை இயற்றியவர் நக்கீரனார் என்னும் சங்கப் புலவராவார்.

பிற ஆற்றுப் படைகள்:

பத்துப் பாட்டைச் சேர்ந்த சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை ஆகிய நூற்பெயர்கள், யார்யாரை ஆற்றுப் படுத்துகிறார்களோ—அவரவர் பெயர்களால் அமைந்துள்ளன. அஃதாவது,—பாணரையும் பொருநரையும் அரசரிடம் ஆற்றுப்படுத்தும் நூல்கள் அவர்கள் பெயர்களால் பாணாற்றுப்படை எனவும் பொருநர் ஆற்றுப்படை எனவும் வழங்கப் பெறுகின்றன. ஆனால் திருமுருகாற்றுப்படையின் பெயரமைப்பு அவற்றினும் வேறானது. யாரிடம் ஆற்றுப்படுத்துகிறார்களோ-அவர் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. அஃதாவது,—முருகனிடம் அன்பனை ஆற்றுப்படுத்துவதால் ‘முருகாற்றுப்படை’ எனப்பட்டது. எனவே, ஆற்றுப்படை நூல்களுள் தனியொரு சிறப்பிடம் பெற்றிருப்பது திருமுருகாற்றுப்படை என்பது புலனாகும்.