பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 19



பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று கூறி, அன்றைக்கே மந்திரி வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்.

“இவர் போனால் என்ன? இவரை விட மிக மிக மூளையுள்ளவரை விரைவிலே நியமித்துக் காட்டுகிறேன்” என்று அலட்சியமாகக் கூறினார் ராஜா.

பிறகு, வெகுநேரம் யோசனையில் மூழ்கினார். திடீரென்று, ‘அதுதான் சரி. பெரிய மண்டையிருக்கிற ஒருவரை மந்திரியாக்கிவிடலாம். மண்டை பெரிதாக இருந்தால், நிச்சயம் மூளையும் அதிகமாக இருக்கும். மூளை அதிகமாக இருந்தால் நிச்சயம் அறிவும் நிறைய இருக்கும்” என்ற முடிவுக்கு வந்தார்.

மறுநாள் நாடு முழுவதும் தண்டோரா போடச் சொன்னார்.


  ‘டமர டமர டம் டமர டமர டம். இதனால்
  அறிவிப்பது என்னவென்றால், யார் யாருக்கு
  மண்டை பெரிதாயிருக்கிறதோ, அவர்களெல்லாம்
  வருகிற வெள்ளிக்கிழமை 10 மணிக்கு
  அரண்மனை மண்டபத்திற்கு வந்துவிட
  வேண்டும். அவர்களிலே ஒருவரை நம் ராஜா,
  மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்...
  தேர்ந்தெடுக்கப் போகிறார்... டும், டும், டும்;
  டும், டும், டும்.’