பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 39விடும் நேரத்திற்குச் சரியாக வீட்டுக்கு வந்து விடுவான்! இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாற்ற முடியும்? அவன் அப்பாவுக்கு இது தெரிந்ததும், அவர் அவனை அடி அடி என்று அடித்தார். அடி அதிகமாக ஆக அவன் பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டான், ஊர் சுற்றியானான்.

அந்த வாசு, சோமுவை எப்படியோ சிநேகம் பிடித்துவிட்டான். மாலையில் மணி ஐந்தடித்தால் போதும்; அவன் சோமு வீட்டுக்குச் சிறிது துரத்திலுள்ள அரச மரத்தடியில் வந்து நிற்பான். சோமு அவன் நிற்பதைப் பார்த்ததும், வீட்டிலிருந்து மெதுவாக நழுவி அவன் அருகிலே போவான். இருவரும் ஊருக்குக் கடைசியிலுள்ள மாந்தோப்புக்குப் போய்விடுவார்கள்.

அங்கு போய் மாம்பழங்களைத் திருடித்தின்பார்கள். அத்துடன் அந்தப் பக்கமாகப் பறந்து வரும் பறவைகளையும் குறி பார்த்து அடிப்பான் வாசு. சும்மா அடிக்க மாட்டான். உண்டிவில்லால் அடிப்பான். ஒரு நாளுக்கு ஒன்றிரண்டு பறவைகளையாவது அடிக்காமல் வீடு திரும்பமாட்டான். இந்த வித்தையை அவன் சோமுவுக்கும் கற்றுக் கொடுக்காமல் இருப்பானா? சோமுவுக்கும், ஓர் உண்டிவில் தயாரித்துக் கொடுத்து, அவனையும் நன்றாகப் பழக்கிவிட்டான்.