உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 ❖

திரும்பி வந்த மான் குட்டி



குப்புவின் தலைமுடிக்கு என்ன ஆயிற்று?

சென்ற வருடம் அவனுக்கு விஷ சுரம் வந்தது. உடனே அவன் பாட்டி, “திருப்பதி வெங்கடாசலபதியே, என் பேரனைக் காப்பாத்து. அவனுக்கு முடி வளர்த்து, உன் சன்னதியிலே கொண்டு வந்து இறக்குகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். சொன்னபடி செய்தாயிற்று. இப்பொழுது, அவன் தலை மொட்டை! மொட்டைத் தலைமேலே ஓலைக்குல்லா!

குப்பு எட்டாவது படிக்கிறான். அவன் வகுப்பில் மொத்தம் நாற்பத்தி இரண்டு மாணவர்கள். குப்பு படிப்பிலே ரொம்ப சுமார். ரொம்ப ரொம்ப சுமார்! 40-வது ராங்க்! அப்படியென்றால், எவ்வளவு புத்தி சாலியாக இருக்க வேண்டும்?

குப்பு எப்போதும் கடைசி பெஞ்சியிலேதான் உட் காருவான். அவனுக்கு இடப் பக்கம் கோபு, கோவிந்து, வலப்பக்கம் சரவணன், சங்கர் உட்காருவார்கள். அவர்களும் குப்பு மாதிரிதான் படிப்பிலே!

குப்பு திருப்பதிக்குப் போய் வருவதற்கு முன்பு, அப்பாவின் கட்டளைப்படி தினமும் காலை 8 மணிக்கு அவர்களுடைய பலசரக்குக் கடைக்குச் செல்வான். 9 மணிவரை கடையில் இருந்து விட்டுப் பிறகுதான் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான்.