அழ. வள்ளியப்பா
❖ 57
கடை வேலைகளை அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது, அவனுடைய அப்பாவின் ஆசை. ஆனால் அவன் கடையிலே செய்யும் வேலை அவன் அப்பாவுக்குத் தெரியாது.
கடையில் இருக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்குள், அப்பாவுக்குத் தெரியாமல் கற்கண்டு, வெல்லக்கட்டி, முந்திரிப் பருப்பு. இப்படிச் சில பண்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்வான். பள்ளிக்கூடம் வந்ததும், தன் கடைசிப் பெஞ்சு நண்பர்களுக்குக் கொடுத்துத் தானும் தின்பான், பாடத்தைக் கவனிக்காமல். இந்தப் பண்டங்களைத் தின்பதிலே அவர்கள் பொழுதைப் போக்குவார்கள்.
இப்போது திருப்பதிக்குப் போய் வந்த பிறகு, குப்பு தினமும் நிறைய நிறையக் கற்கண்டுக் கட்டிகளையும், வெல்ல அச்சுக்களையும், முந்திரிப் பருப்புகளையும் கொண்டுவர ஆரம்பித்துவிட்டான். முன்பெல்லாம் மடியிலும், சட்டைப் பையிலும் அவைகளைப் போட்டுக்கொண்டு போவான். இப்போது, அப்பா பார்க்காதபோது அவற்றைக் குல்லாக்குள்ளே ஒளித்து ஒளித்து வைத்துக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டான். அவனுடைய நண்பர்களுக்கு ஏக குஷி!