உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 59



தெரியுதே, அந்தத் தென்னை மரத்திலே உட்கார்ந்திரு. நான் அந்தப் பாத்திரத்திலேயிருக்கிற பண்டத்திலே பெரிசாப் பார்த்து ஒண்ணு எடுத்து வர்றேன். ரெண்டு பேரும் பங்கு போட்டுத் தின்னலாம்” என்றது முதல் காக்கை. “நல்ல யோசனை. நீ சொன்னபடியே நான் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தக் காக்கை மெதுவாகக் கீழ் நோக்கிச் சென்று, விருட்டென்று ஒலைக் குல்லாயைக் கொத்திக் கொண்டு பறந்து போய்த் தென்னைமரத்தில் உட்கார்ந்து கொண்டது.

மறுவிநாடியே குப்புவின் தலையிலிருந்த கற்கண்டு, வெல்லம், முந்திரிப் பருப்பு எல்லாம் உருண்டு தரையில் விழுந்தன. அடடே, எல்லாமே தரையில் விழுந்து விட்டதாகச் சொன்னேனா? இல்லை, இல்லை ஒரே ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி மட்டும் தலை நடுவே தனியாக நின்றது!

கண்மூடிக் கண் திறப்பதற்குள் முதலில் யோசனை சொன்ன காக்கை வேகமாகப் பாய்ந்து அவன் தலை அருகே வந்தது. அங்கே பாத்திரம் எதையும் காணாத போனாலும், அதற்கு ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி போதாதா? வேகமாகப் பாய்ந்து அந்தக் கற்கண்டுக் கட்டியைக் கொத்திக் கொண்டு உயரப் பறந்தது.