பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 ❖

திரும்பி வந்த மான் குட்டி



எவ்வளவு பணம் கிடைக்குமோ, அதிலே சரிபாதிக்குப் பொரி, கடலை, தேங்காய்க் கீற்று, வாழைப் பழம். இப்படி ரங்கனுக்குப் பிடித்ததாகப் பார்த்து வாங்கிக் கொடுத்திடுவார் கோவிந்தசாமி. இன்னொரு பாதிப் பணத்திலே அவருக்குத் தேவையான சோறு, பலகாரம், டீ, வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வார். தமக்கென்று அதிகமாக எடுத்துக்கொள்ளவே மாட்டார்!

ரங்கனை அவர் சொந்தப் பிள்ளை மாதிரியே வளர்த்து வந்தார். சில சமயம் அதை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு, “ரங்கா, இந்த வயசான காலத்திலே எனக்கு யாரு இருக்கிறாங்க? நீதான் நான் பெத்த பிள்ளை மாதிரி சம்பாதிச்சு என்னைக் காப்பாத்தறாய்” என்று பாசத்தோடு கூறுவார்.

ரங்கனுக்கும் கோவிந்தசாமியிடத்திலே மிகுந்த பிரியம்தான். ஆனாலும் நடுநடுவே அதற்கு ஓர் ஆசை வந்து விடும்!

தினமும் கடைவீதி வழியாகப் போகும்போது அங்கே கடைகளில் குவியல் குவியலாக இருக்கிற பொரி, பட்டாணிக் கடலை, பொட்டுக் கடலை, வேர்க்கடலை, தேங்காய், சீப்புச் சீப்பாகத் தொங்குகிற வாழைப்பழங்கள் முதலியவற்றையெல்லாம் பார்க்கும். உடனே நாக்கிலே எச்சில் ஊறும்.