பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


பரிமேலழகர். செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப் பெற்ற சிறப்புடைய செல்வமாவது அருளால் வரும் செல்வமே; ஏனைப் பொருளால் வரும் செல்வங்களோ இழிந்தாரிடத்தும் உள்ளன. மன்னுயிர்களை ஒம்பி அவ்வறத்தினால் மேம்படுதலாகிய அருட் செல்வம் அறிவொழுக்கங்களாற் சிறந்த உயர்ந்தோரிடத்திலேயே நிலைத்து நிற்கும் ஆதலால், அவ்வருளால்வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறப்புடைய செல்வமாகும் என அறிவுறுத்துவது,

“அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள”

(குறள் 241)

எனவரும் திருக்குறளாகும்.

பிறரை ஏவும் முறையில் நீண்ட ஆணைமொழிகளைப் பேசுதலும் தாம் விரும்பிய இடங்களுக்கு நினைத்த மாத்திரத்திலேயே விரைந்து செல்லுதற்குரிய ஊர்திகளை ஏறிச் செலுத்துதலும் செல்வத்தின் பயனென எண்ணி நுண்ணுணர்வு இல்லாதார் பிறர்க்கு உதவி செய்யாது தமது வாழ்க்கையை வீணே கழிப்பர். அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் பண்பினால் நிறைந்த சான்றோர்கள், தம்மையடைந்தவர்கள் படும் துயரத்துக்கு அஞ்சி அவர்கட்கு வேண்டுவன அருளும் உயிர்இரக்கமாகிய பண்பினையே பெருஞ் செல்வமாகக் கொண்டு மன்னுயிர்களின் துயரங்களைப் போக்குதலே தம்முடைய வாழ்க்கைக் குறிக் கோளாகக் கொண்டு வாழ்வார்கள். இவ்வுண்மையைச் சங்கத் தமிழ்ச் சான்றோர் ஒருவர் நற்றிணைப் பாடலொன்றில் தெளிவாக விளக்குகின்றார்.