பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


செல்வங்களுக்கும் மேலான சிறப்புடைய செல்வமாகும்' என்பது இப்பாட்டின் பொருளாகும்.

தன்னையடைந்தவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கித் துயர் துடைக்க முற்படும் அருளுடைமையாகிய செல்வமே சான்றோர்களால் செல்வமென மதிக்கப்படுவது என்னும் இவ்வுண்மையினை 'மிளை கிழான் நல்வேட்டனார்' என்னும் புலவர் மேற்காட்டிய நற்றிணைப் பாடலில் வற்புறுத்தியுள்ளமை காணலாம்.

கணவனும் மனைவியுமாக அன்பினாற் கூடி வாழ்ந்தோர் உறவுமுறை முதலிய தொடர்பு நோக்காது எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடையராய் வாழும் அன்பின் முதிர்ச்சியே அருளாகும். 'அருளென்னும் அன்பீன் குழவி' என்றார் தெய்வப்புலவரும். கணவனும் மனைவியுமாகக் கூடிவாழும் இருவர்க்கும் உரியனவாகக் கூறப்படும் பிறப்பு முதலிய பத்துவகைப் பொருத்தங்களுள் உயிரிரக்கமாகிய அருட்பண்பும் ஒன்றாகும் என ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளார்.

தன் ஆருயிர்த்தலைவியைப் பிரிந்து மன்னனுக்குத் துணையாய் வினைவயிற் சென்ற தலைவன், அத்தொழில் நிறைவேறிய நிலையில் தலைவியின் பிரிவுத்துன்பத்தை நீக்குதற் பொருட்டுத் தேரில் ஏறி விரைந்து வருகின்றான். அவ்வாறு வரும்போது வழியிடையே அமைந்த காடுகளிலே மலர்களில் உள்ள தேனைப்பருகி ஆணும் பெண்ணுமாகக் கூடி இன்புற்றிருக்கும் வண்டுகளின் அன்பின் நிலையை எண்ணிப் பார்க்கின்றான. மணிகட்டிய தன் தேர் அக்காட்டின் வழியே விரைந்து செல்லுமானால் தன் தேரில் கட்டிய மணிகளின் பேரொலியின் அதிர்ச்சியினால் அவ்வண்டுகள் துன்புறுமே எனச் சிந்திக்கின்றான். தன்னுடைய தேரின் ஆரவாரம் காட்டில் உள்ள வண்டு