பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


அடக்குதல் வேண்டிப் புறாவின் நிறை அளவிற்கு ஈடாகத் தனதுடம்பினைத் தராசில் நிறுத்துத் தந்தவன், வரையா வண்மையும் போராற்றலும் படைத்த சோழ மன்னன் சிபி என்பவனாவான். சிற்றுயிர்கள் படும் துன்பத்துக்கு இரங்கித் தன் உடம்பினையே பருந்துக்கு உணவாக அளித்த இவ்வேந்தர் பெருமானின் உயிரிரக்க வுணர்வினை,

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா யீகை யுரவோன்

எனத் தாமப்பல்கண்ணனார் என்னும் புலவர்பெருமான் நெஞ்சம் நெகிழ்ந்து போற்றியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

பேகன் என்னும் வள்ளல், குளிரால் நடுங்கிய மயிலின் துன்பத்தைக் கண்டு ஆற்றாது உயிரிரக்கத்தால் தான் அணிந்திருந்த பொன்னாடையைப் போர்த்தி அதன் குளிரைப் போக்கினான் என்ற செய்தி சங்க இலக்கியத்திற் புலவர் பெருமக்களால் பாராட்டிப் போற்றப் பெற்றுள்ளது.

மடத்தகை மாமயில் பனிக்கு மென் றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக