பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

உடாஅ போரா லாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்

எனப் பரணரும்,

வானம் வாய்த்த வள மலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்

என இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும், பேகனது உயிரிரக்கத்தினை உள்ளங்கசிந்து போற்றியுள்ளமை காணலாம்.

இவ்வாறு, உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் இரங்கி அவற்றின் துன்பங்களை விரைந்து நீக்க முற்படும் உயிரிரக்க உணர்வு ஆறறிவுபடைத்த மக்கட் குலத்தார்க்கு இன்றியமையாதது என்பதும், இங்ங்னம் பிற உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு இரங்கும் அருளொழுக்கம் வாய்க்கப் பெறாதார் பெற்றுள்ள அறிவினால் சிறிதும் பயனில்லை யென்பதும்,

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தன்னோய்போல் போற்றாக்கடை

எனவரும் திருக்குறளினால் வலியுறுத்தப் பெற்றுள்ளமை முன்னரும் கூறப்பட்டது.

தனக்குப் பிறர்செய்யுந் துன்பங்கள் தன்னுயிர்க்கு வருத்தம் தருதலைத் தன் அனுபவத்தால் அறிந்த ஒருவன் தன்னையொத்த நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் இன்னா செய்தல் என்ன காரணத்தாவோ? என அவனது பேதைமையை நினைந்து தெய்வப்புலவர் திருவள்ளுவர் இரங்குவதாக அமைந்தது,